சீர்காழியில் ரூ.4.36 கோடி நிதி ஒதுக்கியும் தாசில்தார் அலுவலகம் கட்டும் பணி தாமதம்: 5 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட அவலம்

சீர்காழி: சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே, சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கிளை சிறைச்சாலை சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித் துறை அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் அலுவலகம் ஆதார் சேவை மையம் இ சேவை மையம் இயங்கி வந்தன. இதே வளாகத்தில் செயல்பட்டு வந்த சீர்காழி தாசில்தார் அலுவலகம் இயங்கிவந்த கட்டிடம் கடந்த 85 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதால் கட்டிடம் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு மழைக்காலங்களில் மழைநீர் கட்டிடத்தின் உள்ளே வந்ததால் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது.

இந்த அலுவலகத்தில் 94 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கல்விச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வரும் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, தேர்தல் பிரிவின்கீழ் வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றனர் . மேலும் ஒரே பகுதியில் மற்ற அரசு அலுவலகங்களும் இயங்கி வருவதால் கிராமப் பகுதிகளிலிருந்து வரும் மக்கள் ஒரே இடத்தில் தங்களது தேவைகளை அருகருகே பூர்த்தி செய்து கொள்ள வசதியாக இருந்தது.

மேலும் தாசில்தார் அலுவலக கட்டிடம் பழுதடைந்ததால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அச்சத்துடனேயே பணிபுரிந்து வந்தனர் மேலும் அலுவலக கணினிகள் ரெக்கார்டுகள் மழையால் சேதம் அடைந்து வந்தன இந்நிலையில், தாசில்தார் அலுவலகம் இயங்கி வந்த கட்டடம் பழைமையாகி சேதமடைந்ததால் புதிய கட்டடம் கட்ட தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரூ.4 கோடியே 36 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த ஒப்பந்த பணிக்கு டெண்டர் விடப்பட்டது. புதிய கட்டடம் கட்டுவதற்கு வசதியாக சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள சட்டைநாதர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு தாசில்தார் அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டு அங்கு வாடகைக்கு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த தற்காலிக அலுவலகம் இயங்கும் இடத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு உட்காருவதற்கு கூட இடம் கிடையாது இதனால் பெண்கள், முதியவர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர் . அலுவலகங்கள் செயல்பட போதிய வசதி இல்லை இதனால் ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கிடையே பணிபுரிந்து வருகின்றனர் புதிய தாசில்தார் அலுவலக கட்டிடம் கட்டும் இடத்தில் குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டுவந்ததால் பணிகள் தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தட்டிக்கழித்து வந்தனர். தற்போது சீர்காழி கச்சேரி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறக்கப்பட்டதால் பழைய இடம் காலியாக உள்ளது. புதிய தாசில்தார் அலுவலகம் கட்ட எந்த தடையும் இல்லை.

ஆனாலும், புதிய கட்டிடம் கட்ட டெண்டர் விட்டு 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை இதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை . தாசில்தார் அலுவலகம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் பல லட்சம் ரூபாய் அரசின் பணம் வீணாக செலவழிக்கப்படுகிறது புதிய தாசில்தார் அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும் கட்டுமான பணியை ஏன் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் தொடங்க நடவடிக்கைை எடுக்கவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி தாசில்தார் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: