சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தமிழ்நாட்டிற்கு தேசிய அளவில் 3-வது இடம்: விருதுகளை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

சென்னை: சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றதற்காகவும், ‘சுஜாலம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில் ஐந்தாம் இடம் பெற்றதற்காகவும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (7.10.2022) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் சந்தித்து, இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், தமிழ்நாடு மூன்றாவது இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட விருதினையும், ‘சுஜாலம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில் தமிழ்நாடு ஐந்தாம் இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட விருதினையும் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

ஓவ்வொரு ஆண்டும், ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மூலம் ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாக கொண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்படும். அதன் அடிப்படையில், 2021-22ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், தமிழ்நாடு ‘மூன்றாம்’ இடத்தை பெற்றுள்ளது.

‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில், வீட்டுத்தோட்டம், தனி நபர் உறிஞ்சுக்குழிகள் மற்றும் சமுதாய உறிஞ்சுக்குழிகள் போன்ற கழிவு நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1.03 லட்சம் தனிநபர் / சமுதாய உறிஞ்சுக்குழிகள் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைக்கப்பட்டது. தேசிய அளவில், ‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில் தமிழ்நாடு ‘ஐந்தாம்’ இடம் பெற்றுள்ளது.

புதுதில்லியில் 2.10.2022 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட இந்த இரண்டு விருதுகளையும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மை செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

முதலமைச்சர் அவர்களிடம் விருதுகளை காண்பித்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் டாக்டர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர்  மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச. திவ்யதர்ஷினி, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைச் செயலாளர் சந்திர சேகர் சாகமூரி, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: