திருப்பத்தூர் மாவட்டத்தில் சாதனை: குறைமாத பிரசவத்தில் பிறந்த 97 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய அரசு மருத்துவமனை

* தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக சிகிச்சை

*  24 மணி நேரமும் செவிலியர், மருத்துவர் கண்காணிப்பு

திருப்பத்தூர்: தமிழகத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது. மேலும் கடந்தாண்டு எடை குறைவாக பிறந்த 97 குழந்தைகளை மருத்துவ குழுவினர் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக 24 மணிநேரமும் செவிலியர், மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் தெரிவிக்கிறார். வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு இந்த அரசு மருத்துவமனையில் 2,500 புறநோயாளிகளும், 350க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த அரசு மருத்துவமனையில் குறிப்பாக மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாதத்திற்கு சுமார் 550 பிரசவங்கள் மருத்துவமனையில் பார்க்கப்பட்டு வருகிறது. அதில் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை வார்டில் மாதத்திற்கு 180 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல முறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பிறந்த குறைமாத குழந்தைகளுக்கு (ராட்டினோபதி) நோய் கண்டறியப்பட்டு லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்பார்வை மீட்டெடுக்கப்படுகிறது.

பச்சிளம் குழந்தைகளுக்கு பார்வை இழப்பு ஏதாவது உள்ளதா? என கண்டறியும் அதிநவீன கருவிகள் மூலம் பார்வை குறைபாடு கண்டறியப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 2,015 கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் 1,500 கிராம் எடை குறைவாக 97 குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும் 600 கிராம் முதல் 700 கிராம் வரையில் எடை குறைவாக 37 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குழந்தைகளை அதிநவீன சுவாச கருவிகள் மற்றும் வென்டிலேட்டரில் வைத்து அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றி உள்ளனர். மேலும் 2 மாத காலம் மற்றும் ஒரு மாத காலம் இந்த குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவில் வைக்கப்பட்டு செயற்கை சுவாசம் உள்ளிட்டவைகள் அளிக்கப்படுகிறது.

மேலும் தாய்ப்பால் வங்கியில் வைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 20 மில்லி கொடுத்து இந்த குழந்தைகளை தனியார் மருத்துவமனைக்கு நிகராக காப்பாற்றப்பட்டு வருகிறது. அதேபோல் பெரிய மருத்துவமனைகளான தனியார் மருத்துவமனைக்கு நிகராக குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அனைத்தும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டு குழந்தைகளை காப்பாற்றி வருகின்றனர். மேலும் இதே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு 800 சர்க்கரை நோய் அளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அந்த குழந்தை நல்ல முறையில் இருந்து வருகிறது.

இதுகுறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பல கோடி ரூபாய் மதிப்பில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் பிறந்தவுடன் மூச்சு திணறல், குறைமாதம், ரத்தமாற்று சிகிச்சை  உள்ளிட்டவைகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.

மேலும் எடை குறைவாக பிறந்த, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு வேலூர், தருமபுரி உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு ஏற்ப திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த குறைமாத குழந்தைகள் பிறக்கும்போது எடை குறைவாக இருந்தால் அவர்களுக்கென (வெண்டிலேடர்) வசதியே ஏற்படுத்தப்பட்டு, அந்த குழந்தைகள் எடை கூடுவதற்காக, தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவிக்கப்பட்டு, 2 முறை திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தமிழகத்திலேயே பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் சிறந்த மருத்துவமனை என்ற பாராட்டு சான்றிதழ்களையும் பெற்ற மருத்துவமனையாக திகழ்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளில் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை வார்டில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 43 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 600 கிராம் முதல் 700 கிராம் வரையில் எடை குறைவான குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் 24 மணி நேரமும் செவிலியர் மற்றும் மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: