பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது

சென்னை: ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள சென்னையில் நாளை குறைதீர் முகாம் நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:  பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையிலும், குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் தமிழகம் முழுவதும்  ஒவ்வொரு  வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 8ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல்  பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும்  புதிய குடும்ப அட்டை,  நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: