மொழி அரசியலை திணிக்க வேண்டாம் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் கிடையாது: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள படம், ‘பொன்னியின் செல்வன்’. கடந்த செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வந்த இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்த இயக்குனர் வெற்றிமாறன், ராஜராஜ சோழன் குறித்து சொன்ன கருத்துகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர் பேசும்போது, ‘மக்களுக்காகத்தான் கலை. மக்களுடைய எண் ணங்களை பிரதிபலிப்பதுதான் கலை. எனவே, இன்று கலையை நாம் மிகச்சரியான முறையில் கையாள வேண்டும்.

அப்படி கையாள்வதற்கு  தவறிவிட்டால், வெகுவிரைவில்  நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடமிருந்து பல அடையாளங்களை பறித்துக் கொண்டு இருக்கின்றனர். வள்ளு வருக்கு  காவி உடை  கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று, இப்படி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களைக் காட்டுகின்றனர். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம் விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால், நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்’ என்றார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சென்னையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சிறப்புக்காட்சியை விக்ரம், கார்த்தி ஆகியோருடன் பார்த்த கமல்ஹாசனிடம், வெற்றிமாறன் சொல்லியிருந்த கருத்துகள் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் மட்டுமே இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந் தது. அவற்றை 8ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர், ‘ஷண்மத ஸ்தாபனம்’ என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் இருப்பவை. ‘பொன்னியின் செல்வன்’ படம் வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தைப் புனைய வேண்டாம். திரிக்க வேண்டாம்.  மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம்’ என்றார்.

Related Stories: