அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கள அதிகாரிகளுக்கு தேவையான விவரங்களை அளிக்க வேண்டும்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு முதன்மைச் செயலாளர் உதய சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணை: அரசு எடுக்கின்ற கொள்கை முடிவுகளின் படி வெளியிடப்படும் அறிவுப்புகளை எப்படி அனைத்து துறைகளும் செயல்படுத்துகின்றன என்பது குறித்து அந்தந்த துறைகளில் இருந்து புள்ளி விவரங்கள் திரட்டப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக அந்த கண்காணிப்பு பணிகளை  மாவட்ட அளவில் மேலும் வலுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள், துணை ஆட்சியர், உதவி இயக்குநர்கள் அளவில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர்.  

அப்படி தேர்வு செய்யப்படும் கள அதிகாரிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். மாதத்துக்கு 4 முறை அல்லது அரசு அறிவிக்கும் நாட்களிலோ இந்த ஆய்வுகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.

அரசின் அனைத்து திட்டங்களையும் அந்த ஆய்வில் பார்வையிடுவார்கள். அரசு அறிவிக்கின்ற நலத்திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளுக்கு சென்று சேர்ந்துள்ளதா என்றும், அப்பயனாளிகளின் உண்மைத் தன்மை, திட்டங்கள் செயல்படும் நிலை, அதில் ஏதாவது குறிப்பிடத்தக்க குறைகள் இருந்தால் அவற்றையும் கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பது, திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்துவது, தரமான முறையில் செயலாற்றி நல்ல வெளிப்பாடுகளை கொண்டு வருவதற்கான வழிகள், ஆகியவற்றையும் கண்காணிப்பார்கள்.

அதில் ஏதவாது முறைகேடுகள், பிரச்னைகள், குறைகள் இருந்தால் அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். மேற்கண்ட கள கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்ளத் தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் செய்து கொடுக்க வேண்டும். கள அதிகாரிகள் கேட்கும் புள்ளி விவரங்களை அந்தந்ததுறைகளில் உள்ளவர்கள் உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் ஆட்சியர்கள் எடுக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: