ஊழல் வழக்குகளை கண்டு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அஞ்சுவது ஏன்? ரூ.41 ஆயிரம் கோடி மர்மம் குறித்த தகவலை விரைவில் வெளியிடுவேன்: ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி

சென்னை: ஓபிஎஸ் அனுமதி அளித்தால், ரூ.41 ஆயிரம் கோடி மர்மம் குறித்த தகவலை விரைவில் வெளியிடுவேன். நவம்பர் 21ம் தேதிக்கு பிறகு பல அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியவரும் என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் கூறினார். இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குழுவினர் கதிகலங்கி இருக்கின்றனர். குறிப்பாக  நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணி குழப்பத்துடனும், அச்சத்துடன் பேட்டி கொடுத்துள்ளார். இப்போதுதான் நாமக்கல் மாவட்டத்தை 3 ஆக பிரித்து, ஓபிஎஸ் நிர்வாகிகளை நியமித்துள்ளார். இதன் காரணமாக 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டமே புரண்டு விட்டது. இதை பார்த்து கவலை அடைந்த தங்கமணி, தனது ஆதரவாளர்களை அழைத்துவந்து பேட்டி அளித்துள்ளார். இதுவரை அதிமுகவில் ஜெயக்குமார்தான் பொய்யான தகவல்கள் கூறுவார். இப்போது தங்கமணியும் அதே களத்தில் இறங்கியுள்ளார்.

தர்மயுத்தம் ஆரம்பித்ததில் இருந்து நான் ஓபிஎஸ்சுடன் இருந்து வருகிறேன். ஒருநாள் ஓபிஎஸ் எங்களை அழைத்து, நிலைமை இப்படியே போய்க் கொண்டிருந்தால் கட்சியும், ஆட்சியும் வீணாகி விடும். தர்மயுத்தத்தின் நோக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டதால், கட்சியின் ஒற்றுமையை கருதி இணைந்து செயல்படலாம்’ என்று கூறினார். அதன்பிறகு நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தையில் ஓபிஎஸ் சார்பில் நானும், அவர்கள் சார்பில் வைத்திலிங்கமும்தான் பூர்வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கினோம். அதன் பிறகுதான் தங்கமணி, வேலுமணி வந்தார்கள்.

ஓபிஎஸ் கரங்களை பிடித்துக் கொண்டு தங்கமணி, வேலுமணி என்ன சொன்னார்கள் என்பது அவர்களது மனசாட்சிக்கு தெரியும். இந்தமுறை எடப்பாடி முதல்வராக இருக்கட்டும், அடுத்தமுறை நீங்கள் (ஓபிஎஸ்) முதல்வராக இருங்கள் என்று தங்கமணி சொன்னாரா, இல்லையா. எவ்வளவு பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தார். ஆனால், நீங்கள் கொடுத்த உறுதிமொழிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. ஒற்றைத்தலைமை என்பது கற்பனை, இரட்டை தலைமைதான் கட்சியில் இருக்கும் என்று இதே எடப்பாடிதான் சேலத்தில் கூறினார். ஆனால், திட்டமிட்டு அடுத்த 4 நாளில் மாவட்ட செயலாளர்களுக்கு தகவல் அனுப்பி, சென்னைக்கு வரவழைத்து ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என்று பேச வைத்தனர்.

மனசாட்சியோடு தங்கமணி பேசினால், உண்மையை பேச வேண்டும். இந்த கட்சி எடப்பாடி வீட்டு சொத்தா, கட்சிக்கு என்று ஒரு மரியாதை, ஒரு சட்டம் இருக்கிறது. வைத்திலிங்கம் நியாயத்துக்கு எதிராக, மனசாட்சிக்கு விரோதமாக பேசியதே கிடையாது. அதனால் அன்று கோபப்பட்டார். நத்தம் விஸ்வநாதன் உள்பட யாரையும் அடிக்க பாயவில்லை. ஜெயக்குமார் போல் தங்கமணி திடீரென இப்படி பேசுவது ஏன். நவம்பர் 21ம் தேதிக்கு பிறகு பல அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியவரும். வழக்கில் சிக்கி விடாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேரம் பேசிய உண்மைகள் எல்லாம் வெளிப்பட்டால் நிலைமை என்ன ஆகும். அதனால்தான், திமுக அரசு தனது கடமையை செய்யட்டும் என்று ஓபிஎஸ் கூறினார். நான் நிரபராதி என்று நிரூபிக்கிறேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சொல்ல வேண்டும்.

குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. யார் சம்பந்தப்பட்டவர்கள் என்று பொய் புகாரோ அல்லது உண்மை புகாரோ தெரிவிக்கப்பட்டாலும் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஓபிஎஸ் அனுமதி அளித்தாரேயானால், ரூ.41 ஆயிரம் கோடி என்று சொல்லக்கூடிய ஒரு மர்மத்தை, ஒரு ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன். அப்போது வெட்டவெளிச்சமாக உண்மைகள் இந்த நாட்டு மக்களுக்கு தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். வழக்கில் சிக்கி விடாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேரம் பேசிய உண்மைகள் எல்லாம் வெளிப்பட்டால் நிலைமை என்ன ஆகும்.

Related Stories: