ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக கிராம வங்கியில் 225 பவுன் நகை கையாடல் செய்த மேலாளர் கைது: வாடிக்கையாளர் முற்றுகையால் போலீசார் அதிரடி

கோபி: ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக கிராம வங்கியில் 225 பவுன் நகை கையாடல் செய்த மேலாளரை, வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டதையடுத்து போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே டி.ஜி.புதூரில் இந்தியன் வங்கியின் சார்பு வங்கியான தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு டி.ஜி.புதூர், ஏளூர், கெம்மநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்கள் நகையை அடகு வைத்தும் பணம் பெற்றுச்சென்றனர். இந்த வங்கி மேலாளராக அந்தியூர் அருகே தவிட்டுப் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (36) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றினார்.

கடந்த ஜூன் மாதம் வங்கி மேலாளர் குறித்து பல்வேறு புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு சென்றது. அதைத்தொடர்ந்து மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார் தலைமையில் தணிக்கை நடைபெற்றது. அப்போது 14 வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 1,800 கிராம் (225 சவரன்)  நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் மணிகண்டன், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காகவும், மது அருந்தவும் நகையை வங்கி கிளையில் இருந்து கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நகையை திரும்ப வங்கியில் ஒப்படைக்க மணிகண்டனுக்கு 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் நகையை திரும்ப பெற்று தரவில்லை. மேலும் மணிகண்டனை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார், எஸ்பி சசிமோகனிடம் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்தது. நகை கையாடல் செய்யப்பட்ட விவகாரம் தெரிய வந்தால் வங்கிக்கு பிரச்னை ஏற்படும் என நினைத்து ரகசிய விசாரணை நடந்தது. இந்நிலையில், வங்கி மேலாளர் மணிகண்டன் தலைமறைவானதும், வங்கியில் இருந்து நகைகள் மாயமானதும் வெளியே தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டனர். அவர்களிடம் விரைவில் நகைகளை மீட்டு தருவதாக மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார் உறுதி அளித்தார். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த வங்கி மேலாளர் மணிகண்டனை ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட நகையை கையாடல் செய்தது உறுதியானது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories: