ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி என கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் சுபைர். இவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான மக்கள் பாதை அமைப்பின் நிர்வாகி என்றும், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர், இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் குற்ற புலனாய்வு அமைப்பின் மாவட்ட செயலாளர், ஐபிஎஸ் அதிகாரி என்றும் கூறி வந்துள்ளார். அவர் கூறுவது உண்மைதானா? என்று அறிய சேரம்பாடி பகுதியை சேர்ந்த அப்துல்கபூர் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எஸ்பி அலுவலகத்தில் தகவல் கேட்டுள்ளார். அப்போது சுபைர் கூறுவது பொய் என்பதும், அவர் வைத்துள்ள முத்திரைகளுடன் கூடிய லெட்டர் பேடுகள் போலியானவை என்பதும் தெரியவந்தது.

மேலும் ஏழை பெண்களிடம், பிரமாண ஒப்பந்த உறுதிமொழி ஆவணத்தில் நிலம், தொழில், வழக்கு சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள இந்திய மக்களின் பாதுகாப்பு அமைப்பு மூலம் இலவச சட்ட ஆலோசனை பெற சேவை கட்டணம் வழங்குவதாக கூறி கையெழுத்து பெற்று சுபைர் பணம் பெற்றுள்ளதும், சேரங்கோடு வருவாய் கிராமத்தில் நத்தம் பூமியில், வீட்டு மனை இல்லாதவர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி தலா 5 ஆயிரம் வீதம் பலரிடம் பணத்தை பெற்றுள்ளதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின்படி சேரம்பாடி போலீசார் விசாரணை நடத்தி நேற்று காலை சுபைர் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்கள், முத்திரைகளை கைப்பற்றினர். பின்னர் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Related Stories: