இடமாற்றத்தை எதிர்த்த ரைட்டரின் வழக்கில் கர்மாவின் கொள்கைப்படி தீர்ப்பு தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

மதுரை: இடமாற்றம் செய்ததை எதிர்த்த ரைட்டரின் வழக்கில் கர்மாவின் கொள்கைப்படி தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றியவர் ஸ்ரீமுருகன். இவர், தன்னை தூத்துக்குடிக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, ‘‘மனுதாரருக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் தண்டனையைப் போல உள்ளது. கர்மாவின் கொள்கைகள் மூலம் மனுதாரருக்கு நிவாரணம் தர இந்த நீதிமன்றம் விரும்புகிறது. கர்மாவின் கொள்கைளில் சஞ்சித கர்மா (முழு கர்மா) மற்றும் பிராராப்த கர்மா (பகுதி கர்மா) என இருவகை உள்ளது. பிராராப்த கர்மாவின்படி மனுதாரரை மதுரை மாவட்டத்திற்கு போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தென்மண்டல ஐஜி, மதுரை போலீஸ் கமிஷனர் ஆகியோர் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘சட்டத்தின் அடிப்படையிலோ, முந்தைய தீர்ப்புகள் அடிப்படையிலோ தான் தீர்ப்பளிக்க முடியும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு, கர்மாவின் கொள்கைப்படி நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது’’ என வாதிட்டார்.

இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், மனுதாரர் முருகன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 20க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: