கல்வராயன்மலையில் சாராயத்தை ஒழித்திட 6 இடங்களில் தற்காலிக செக்போஸ்ட்

சின்னசேலம்: கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழித்திட கல்வராயன்மலை மற்றம் அடிவார கிராமங்களில் தற்காலிக செக்போஸ்டை மாவட்ட காவல்துறை அமைத்துள்ளது. கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை அதிகஅளவில் உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தனிப்படை போலீசாரைக் கொண்டு அடிக்கடி ரெய்டு செய்து சாராயம் காய்ச்சுதலை கட்டுப்படுத்தி வருகிறது.

இருப்பினும் மலைவாழ் மக்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி அடிபெருமாள் கோயில், மட்டப்பாறை, மாயம்பாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கச்சிராயபாளையம், சின்னசேலம் பகுதிக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல்துறைக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி பகலவன் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் மேற்பார்வையில் கள்ளச்சாராயம் கடத்தி வரும் பகுதிகளான சின்னசேலம் காவல் நிலைய எல்லை பகுதியில் அடிபெருமாள் கோயில், கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைப்பகுதியில் மாயம்பாடி, மட்டப்பாறை, கரியாலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் எழுத்தூர், புதூர், தெற்குக்காடு ஆகிய 6 இடங்களில் தற்காலிக செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த செக்போஸ்ட்டுகளில் உள்ளூர் காவல் துறையினர் மற்றும் பட்டாலியன் போலீசார்  பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் கள்ளச்சாராயம் கட்டுப்படுத்தப்படும். அதைப்போல கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சும் பகுதி, கள்ளச்சாராயம் விற்கும் பகுதி, சாராயம் கடத்தி வரும் பகுதி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போலீசார் ரெய்டு செய்து வருகின்றனர்.

Related Stories: