பக்தி கோஷங்கள் விண்ணதிர குலசை தசரா விழாவில் மகிஷா சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

உடன்குடி: லட்சக்கணக்கான பக்தர்களின் ஓம்காளி, ஜெய்காளி கோஷம் விண்ணதிர குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் 10 நாட்களும் இரவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா வரும் வைபவம் நடந்தது. 10ம் திருவிழாவான நேற்று (5ம் தேதி) காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்களின் ஓம்காளி, ஜெய்காளி கோஷம் விண்ணதிர முத்தாரம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தார்.

இன்று (6ம் தேதி) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளியதும் அபிஷேக ஆராதனை, அதிகாலை 2 மணிக்கு அம்மனுக்கு சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு சாந்தாபிஷேக ஆராதனையும், தொடர்ந்து திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் சென்றடைதலும் நடந்தது. காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதியுலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்து சேர்தல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12ம் திருவிழாவான நாளை (7ம் தேதி) அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், பாலாபிஷேகம் நடக்கிறது.

* 2 ஆண்டுக்கு பிறகு களைகட்டிய திருவிழா

2020 மற்றும் 2021ல் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதால், இந்தாண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தென் மாநிலங்களில் இருந்து கார், வேன், டூரிஸ்ட் பஸ்களில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வந்து குவிந்தனர். மகிஷா சூரசம்ஹாரத்தின் போது குலசேகரன்பட்டினம் கடற்கரை, கோயில் வளாகம் மற்றும் நகரப் பகுதி முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது.

* கிராமங்களில் மின்னொளியில் ஜொலித்த சுவாமி, அம்பாள்கள்

தசரா திருவிழாவையொட்டி சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் மின்விளக்கு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் உருவங்கள் ஜொலித்தன. தாண்டவன்காடு, ஞானியார்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தத்ரூபமாக அம்மன் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. தாண்டவன்காட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மன் சிலை காலை தொட்டு வணங்கினால் எலுமிச்சை பிரசாதமாக கிடைப்பதுபோல் செட்டிங் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிராமங்களிலும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ள செட்டிங்குகளை ஏராளமானோர் பார்வையிட்டு சென்றனர்.

Related Stories: