அதிமுகவிலிருந்து 1000 பேர் பாஜவில் இணைகின்றனர்: எச்.ராஜா பேச்சால் பரபரப்பு

மதுரை: மதுரையில் நேற்று பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா அளித்த பேட்டி: ராஜராஜ சோழன் சிவ பக்தன். எனவே அவர் இந்து தான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிசங்கரர் அவதரித்தார். அப்போது 72 விதமான வழிபாட்டு முறைகள் இருந்த நிலையில், அதனை ஒருங்கிணைத்தார். சிவம் வேறு இந்து வேறு அல்ல. வேதம் வேறு சைவம் வேறு அல்ல. வேதம் வேறு தமிழ் வேறு அல்ல. சைவம், வைணவம் உள்ளிட்ட எத்தனை உட்பிரிவுகள் இருந்தாலும் அத்தனையும் இந்துதான். இந்து தேசத்தில் உருவான மதங்கள் அனைத்தும் இந்து மதமே. ராஜராஜ சோழன் எங்கே மசூதி, சர்ச் கட்டினார் என வெற்றிமாறன் விளக்க வேண்டும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ராஜராஜ சோழன் இந்து தான். அதிமுகவில் இருந்து ஆயிரம் பேர் பாஜவில் இணைய உள்ளனர் என்றார். அப்போது, சிலர், அவருக்கு சால்வை அணிவித்து பாஜவில் இணைவதாக தெரிவித்தனர். எச்.ராஜா, ‘இவர்கள் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்கள்’’ என்றார். நிருபர்கள், ‘‘கூட்டணி கட்சியில் இருந்தே ஆட்களைத் தூக்குறீங்களே?” என்று கமெண்ட் அடித்தனர். இதற்கு பதில் கூறாமல் சிரித்தபடியே எழுந்து சென்றார்.

Related Stories: