சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதியில் பிரமோற்சவம் நிறைவு: ஆகம விதிகள்படி கொடி இறக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த பிரமோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தையொட்டி தினந்தோறும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் கடைசி நாளான நேற்று கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும், சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு வந்தனர். வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி தாயார்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறங்காவலர் குழு தலைவர் சுப்பா, செயல் அதிகாரி தர்மா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சென்னை மற்றும் டெல்லி நிர்வாகக்குழு தலைவர்கள் சேகர், வெமி, பிரசாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து தெப்பக்குளத்தை சுற்றியிருந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் புனித நீராடினர். இதையடுத்து ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் பிரமோற்சவத்திற்காக ஏற்றப்பட்ட கொடி ஆகமமுறைப்படி இறக்கப்பட்டதுடன் வருடாந்திர பிரமோற்சவம் நிறைவு பெற்றது.

* 8 நாட்களில் ரூ.20.43 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பிரமோற்சவத்தின் கடந்த 8 நாட்களில் (நேற்று  முன்தினம் வரை) 5 லட்சத்து 68,735 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதன் மூலம் 8 நாட்களில் 24 லட்சத்து 89 ஆயிரத்து 481 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. எட்டு நாட்களில் உண்டியலில் ரூ.20 கோடியே 43 லட்சத்து 9,400ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.

* சென்னை, மும்பையில் விரைவில் கும்பாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘டிசம்பர் மாதம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலிலும் மற்றும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் வெங்கடேஸ்வர வைபவ உற்சவம் நடத்தப்படும். மும்பையில் விரைவில் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணியும், சென்னையில் கட்டப்பட்டு வரும் பத்மாவதி தாயார் கோயில் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் கோயில்களில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்‘ என்று தெரிவித்தார்.

Related Stories: