கோவையில் கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் ரூ.6.5 கோடி நகை கையாடல்: மார்க்கெட்டிங் மேலாளர் கைது

கோவை: கோவையில் நகை கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்யாமல் 6.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ தங்க நகைகளை கையாடல் செய்த மார்க்கெட்டிங் மேலாளரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லிகார்ஜூனா லேன் ஜே.எம்.ரோட்டை சேர்ந்தவர் சக்னால் காட்ரி (60). தங்கநகை மொத்த வியாபாரி. பெங்களூருவில் அனுமான் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக தங்க நகை ஆபரணங்களை தயாரித்து தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். கோவையில் உள்ள சில நகை கடைகளுக்கு மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார்.

இந்த பணிகளை அவரது நகைக்கடையில் மார்க்கெட்டிங் பிரிவில் மேலாளராக பணியாற்றி வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அனுமன் துவேசி (45) என்பவர் கவனித்து வந்தார். மேலும் பெங்களூருவில் தயாரிக்கப்படும் நகைகளை பத்திரமாக கொண்டு வந்து ஆர்டர்கள் பெறப்பட்ட நகை கடைகளில் ஒப்படைத்து அதற்கான ரசீது பெற்று பெங்களூருக்கு அனுப்பி பணம் பரிவர்த்தனை குறித்து கண்காணிப்பார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை கோவை நகை கடைகளில் விநியோகம் செய்ய கொண்டு வந்துள்ளார். நகைகளை ஆர்டர்கள் தந்த கடைகளுக்கு விநியோகம் செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடை உரிமையாளர் சக்னால் காட்ரி விநியோகம் செய்யப்பட்ட நகைகளுக்கான பண பரிவர்த்தனை இன்னும் வரவில்லை என்பது தொடர்பாக அனுமன் துவேசியிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

அவரது கேள்விக்கு அனுமன் துவேசி முறையாக பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த நகை கடை உரிமையாளர் சக்னால் காட்ரி, நகைகளை கையாடல் செய்ததை உணர்ந்து கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

மேலும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதனடிப்படையில் அனுமன் துவேசியை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். அவரிடமிருந்து நகைகள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் கடையின் முன்னாள் ஊழியர் தல்பத் சிங் என்பவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: