இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம் பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்: சென்னையில் முக்கிய வீதிகள் திக்குமுக்காடியது; பூ, பழங்கள் விலை கடும் உயர்வு

சென்னை: ஆயுத பூஜையை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க சென்னையில் கூட்டம் நேற்று அலைமோதியது. மேலும் பூ, பழங்கள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. நவராத்திரி விழா அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும், பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. நாளை விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. அதே நேரத்தில் ஆயுத பூஜையை அனைத்து தரப்பினரும் பக்தியுடனும் வெகு உற்சாகமாகவும் கொண்டாடுவது வழக்கம். வீடுகளை தூசி தட்டி சுத்தம் செய்து பூஜை நடத்தி கொண்டாடுவர்.

தொழில் நடத்துவோர் தங்கள் இயந்திரங்களை சுத்தப்படுத்தி சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். ஊழியர்களுக்கும் இந்த நாளில் போனசுடன், பொரி, சுண்டல், இனிப்புகளை வழங்கி மகிழ்விப்பதும் வழக்கம். வாகனங்கள் வைத்திருப்போரும் வாடகை வாகன உரிமையாளர்களும், தங்கள் வாகனங்கைள சுத்தமாக கழுவி அலங்கரித்து பூஜிப்பதும் இந்த நாளில் வழக்கம். இப்படி ஆயுத பூஜை நாளில், பூஜையுடன் கொண்டாட்டங்கள் களை கட்டும். இதனால் கடந்த ஒரு வாரமாகவே ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகளில் பலரும் மும்முரம் காட்டி தேவையான பூ, பழங்கள், பொரி, வாழைமரம், பூசணிக்காய், சந்தனம், குங்குமம், அலங்கார தோரணங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க ஆரம்பித்ததால் விற்பனை களைகட்டியது.

இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆயுத பூஜைக்கான பொருட்கள் படு விறுவிறுப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று பூ, பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை இரு மடங்கு, மூன்று மடங்காக உயர்ந்தது. இருந்தாலும் மக்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். சென்னையில் மயிலாப்பூர், புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் விற்பனை நேற்று முதலே களை கட்ட தொடங்கியது. சென்னையை பொறுத்தவரை மயிலாப்பூர், புரசைவாக்கம், கோயம்பேட்டில் பொருட்களை வாங்க நேற்று காலை முதல் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. மாலையில் மேலும் விற்பனை விறுவிறுப்படைந்தது.

ஆயுத பூஜை என்பதால் பழங்கள், பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. அதாவது ஒரு கிலோ மல்லி ரூ.1,200க்கும், முல்லை ரூ.900க்கும், ஜாதி மல்லி  மற்றும் கனகாம்பரம் ரூ.800க்கும்,சாமந்தி ரூ.300க்கும் வெள்ளை அரளி பூ ரூ.500க்கும், ரெட்அரளிபூ ரூ.400க்கும், சம்பங்கி ரூ.220க்கும், மஞ்சள் ரோஸ் ரூ.300க்கும், சாக்லெட் ரோஸ் ரூ.260க்கும் பன்னீர் ரோஸ் ரூ.200க்கும், தவனம் ரூ.200க்கும், மருகு ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதாவது, கடந்த வாரம் ஆப்பிள்(1 கிலோ) ரூ.80 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது.

இது நேற்று ரூ.120 முதல் ரூ.150 வரை தரத்துக்கு ஏற்றாற்போல் விற்கப்பட்டது. ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்ட சாத்துக்குடி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்பட்டது. மாதுளை ஒரு பழம் ரூ.100, கொய்யாப்பழம் கிலோ ரூ.70க்கும், திராட்சை ரூ.80க்கும், ஒரு வாழை தார் ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஒரு கிலோ கேரட் ரூ.120க்கும், நாட்டு தக்காளி ரூ.35க்கும், பெங்களூரூ தக்காளி ரூ.40க்கும், வெங்காயம் ரூ.30க்கும், சின்ன வெங்காயம் ரூ.80க்கும், முருங்கை ரூ.70க்கும் விற்கப்பட்டது. இதேபோன்று பொரி ஒரு படி ரூ.30, உடைத்த கடலை கிலோ ரூ.50, அவல் சிறிய ரகம் கிலோ ரூ.100, வாழைக்கன்று இரண்டு ரூ.30, மாவிலை தோரணம் இரண்டு ரூ.10, வெள்ளை பூசணி ரூ.100 முதல் ரூ. 300 வரை, தென்னை மட்டை தோரணம் இரண்டு ரூ.20, மஞ்சள் வாழை ஒரு தார் ஒன்று ரூ.200 முதல் ரூ.300 வரையும் விற்கப்பட்டது. மேலும் பூக்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது.

அனைத்து பூஜை பொருட்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. விலை அதிகரித்த போதிலும், விலையை பற்றி கவலைப்படாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கினர். மேலும், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் குறைந்த அளவில் பொருட்களை வாங்கியதையும் காண முடிந்தது. இந்த சூழ்நிலையில், ஆயுத பூஜையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடும் வகையில், ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் புறப்பட்டு சென்றனர்.

அதாவது அவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ரயில்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்த காட்சியை காண முடிந்தது.

மயிலாப்பூர், புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் ஆய்தபூஜை விற்பனை களைகட்டியது.

ஒரு கிலோ மல்லி    ரூ.1,200

ஒரு கிலோ முல்லை    ரூ.900

ஒரு கிலோ ஆப்பிள்    ரூ.150

ஒரு கிலோ சாத்துக்குடி    ரூ.60

மாதுளை ஒரு பழம்    ரூ.100

Related Stories: