திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள சோழர்கள் காலத்து திரவுபதி அம்மன் கோயிலில் நடுகற்கள், கல்வெட்டுகள் கண்டெடுப்பு-கோயிலுக்கு தானம் அளித்த தகவல்கள் உள்ளன

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அரசு கலைக் கல்லூரி எதிரில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயில், வரலாற்று சிறப்பு மிக்கது. எனவே, இத்திருக்கோயிலை தொன்மையும், பழமையும் மாறாமல் சீரமைக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.அதையொட்டி, இந்து சமய அறநிலையத்துறையின் திருவண்ணாமலை மண்டல தொல்லியல் ஆலோசகர் வெங்கடேசன், நாகப்பட்டிணம் மண்டல தொல்லியல் ஆலோசகர் பேராசிரியர் இரா.சேகர், சோளிங்கர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் வே.நெடுஞ்செழியன், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் இளங்கோவன், தனிஷ்லாஸ், பன்னீர்செல்வம், ஆசிரியர் ரமாதேவி ஆகியோர், பாஞ்சாலி அம்மன் கோயிலில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, பாஞ்சாலி அம்மன் கோயில் பிரகாரத்தில் உள்ள குதிரை வீரனின் நடுகல்லின் கீழ்பகுதியில் கல்வெட்டு எழுத்துக்கள் இருந்ததை படியெடுத்து ஆய்வு செய்தனர். அதேபோல், தரையில் பதிந்திருந்த பலகை கல்லில் இருந்து எழுத்துக்களும் ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் இரா.சேகர், வே.நெடுஞ்செழியன் ஆகியோர் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் எண்ணற்ற பழமையான கோயில்கள் உள்ளன. அவற்றில், கிரிவல மலையடியொட்டி அரசு கலைக் கல்லூரி எதிரில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயில், கிபி 11-12ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கள் காலத்தை சேர்ந்தது. இந்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட வீரன் சிலையை ஆய்வு செய்ததில், போரில் வீரமரணம் அடைந்த படைத்தளபதியின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் என்பது தெரிகிறது.

அதேேபால், உடன் பிறந்த அல்லது ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 வீரர்களின் நினைவாக ஒரே கல்லின் இருபுறமும் 2 வீரர்களின் உருவம் பதித்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இவை, கிபி 15-16ம் நூற்றாண்டில் நாயக்கர்கள் காலத்தில் அமைந்த நடுகற்கள் என தெரிகிறது.குதிரையின் மீது சாய்ந்த நிலையில் வீரனின் உருவம் பதிந்த நடுகல்லின் கீழ் உள்ள கல்வெட்டில், அருணாசலம் காளி குமாரன் முனியப்பன் பாரி தர்மம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கோயிலுக்கு தானம் அளித்தது ெதாடர்பான கல்வெட்டாக இருக்கலாம் என அறிய முடிகிறது.

அதேபோல், அங்குள்ள மற்றொரு கல்வெட்டில் நந்தன் வருஷம் ஆடி மாதம் செயம் மெய்யூர் ராசபிள்ளை பல பேருடைய உபயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக்கள் தொடர்புடைய கூடுதல் தகவல்கள், தொடர்ந்து ஆய்வு நடத்தினால் முழுமையாக தெரியவரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: