வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; திருப்பூரில் போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி விநியோகம்

 

திருப்பூர்: வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருப்பூரில் சிக்னலில் பணியாற்றும் போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடையும். பல மாவட்டங்களில் வெயிலின் அளவு ‘சதம்’ அடித்து இருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைகளை நாடி வருகிறார்கள். இதனால் தர்பூசணி, பழஜுஸ், இளநீர் போன்றவற்றின் விலை அதிகரித்து உள்ளது. காலை முதல் மாலை வரை குளிர்பான கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சுட்டெரிக்கும் வெயில் போக்குவரத்து போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்து உள்ளது. சிக்னல்களில் போக்குவரத்தை சரிசெய்யும் போலீசார் வெயிலின் தாக்கம் காரணமாக எளிதில் சோர்வடைந்து விடுகின்றனர். ஏற்கனவே சோர்வை தணிக்கவும், வெயிலை சமாளிக்கவும் திருப்பூர் போக்குவரத்து போலீசாருக்கு மோர் பாக்கெட்டுகள், ஜூஸ் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெயில் காலம் முடியும் வரை அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் தெர்மோகோல் மூலம் வடிவமைக்கப்பட்ட சோலார் தொப்பி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சோலார் தொப்பி அணிந்து போக்குவரத்து போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

 

Related Stories: