பந்தலூர் அருகே காபி தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி தவித்த சிறுத்தை: வனத்துறையினர் மீட்டனர்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி  அத்திச்சால் பகுதியில் தனியார் காப்பி தோட்டத்தில் சிறுத்தை ஒன்று, சுருக்குகம்பி வலையில் சிக்கி தவிப்பதாக வனத்துறைக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடனடியாக வனத்துறையினர் சென்று  தொலைவில் நின்று பார்த்தனர். அப்போது சிறுத்தை ஒன்று சுருக்குகம்பியில் சிக்கி ஆக்ரோஷத்துடன் இருந்தது. பாதுகாப்பு கருதி அருகே செல்லாமல் வனத்துறையினர் முதுமலை வன உயிரின கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பல மணி நேர போராட்டத்திற்குப்பின் மீட்டு முதுமலை பகுதிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். சிறுத்தை சுருக்கு கம்பியில் சிக்கியதையடுத்து தோட்ட உரிமையாளர் மேத்யூ (65) தலைமறைவானார். அவரது மருமகன் அணீஸ் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். சுருக்கு கம்பி வைத்தது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகவா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: