குடியாத்தம் அருகே வீட்டில் தனியாக வசித்த விவசாயியை அடித்துக்கொன்று 30 சவரன், பணம் கொள்ளை

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த விவசாயியை அடித்துக்கொன்ற மர்மஆசாமிகள் 30 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக உறவினர்கள் உட்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஒலக்காசி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (92). இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர்.அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதனால் அண்ணாமலை அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார். அவருக்கு உறவினர்கள் தினமும் உணவு கொடுத்து வந்துள்ளனர்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு உறவினர் ஒருவர் உணவு கொடுக்க வந்தபோது அண்ணாமலை வீடு இருண்டு கிடந்தது. நுழைவாயில் பகுதியில் இருந்த பியூஸ் கேரியர் துண்டிக்கப்பட்டு மின் சப்ளை நிறுத்தப்பட்டிருந்தது. சந்தேகமடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ரத்தக்கரையோடு அண்ணாமலை சோபாவில் இறந்து கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த உறவினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது சடலத்தை வீட்டின் வெளியே கொண்டு வந்தார். பின்னர் போலீசாருக்கு தெரியாமல் நேற்று அதிகாலை இறுதி சடங்கு செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து குடியாத்தம் தாலுகா போலீசார் நேற்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  முதற்கட்ட விசாரணையில், வீட்டில் தனியாக இருந்த முதியவரை கொலை செய்ய கொலையாளிகள், தங்களை அடையாளம் தெரியாமல் இருக்க பியூஸ் கேரியரை துண்டித்துள்ளனர் என தெரிய வந்தது. இதையடுத்து 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து உறவினர்கள் உட்பட பலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: