மகாத்மா காந்தியின் 154வது பிறந்த தினம் தமிழக கவர்னர், முதல்வர் மலர்தூவி மரியாதை சர்வோதயா சங்கத்தினரின் நூற்பு வேள்வி, காந்திய இசை பாடல் நிகழ்ச்சி நடந்தது

சென்னை: மகாத்மா காந்தியின் 154வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசின் சார்பில் மகாத்மா காந்தியடிகளின் 154வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேற்று காலை 8 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி, மு.பெ.சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் மயிலை த.வேலு, பரந்தாமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் காந்திய இசை பாடல் நிகழ்ச்சிகளில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டனர். காந்தி சிலை முன்பு ராட்டை சுற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை முதல் காந்தி மண்டபம் வரையில் தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, உலக அமைதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை குறித்து பள்ளி மாணவ- மாணவிகளின் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். காந்தியடிகளின் பிறந்த தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: பேதங்களைக் கடந்து அன்பும்அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த  மகாத்மா காந்தி பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: