தேசிய கட்சி குறித்து 2 நாளில் அறிவிப்பு; கேசிஆர் முடிவு

ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) பாஜவுக்கு மாற்றாக தேசிய அளவில் கட்சி தொடங்க இருப்பதாகவும்  விஜயதசமியன்று இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என  தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி  (டிஆர்எஸ்) தெரிவித்துள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன்பு பாஜ.வுடன் நெருக்கமாக இருந்தார். தற்போது அக்கட்சியுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். வரும், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்க, தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க சந்திரசேகர ராவ் முயன்று வருகிறார். இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்,மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.

பாஜவை எதிர்க்க  தேசிய அளவில் கட்சி தொடங்கப்படும் என்று கடந்த மாதம் சட்டமன்றத்தில் பேசுகையில்  அறிவித்தார். அடுத்த மக்களவை தேர்தலில் பாஜ அல்லாத கட்சி வெற்றி பெற்றால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், டிஆர்எஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘‘புதிய கட்சி தொடங்குவதற்கான திட்டங்கள் தயாராகி வருகிறது.  கட்சி தொடக்கம் குறித்து விஜயதசமி பண்டிகையின் போது(5ம் தேதி) அறிவிப்பு வெளியாகும். இதில் டிஆர்எஸ்  பெயர் மாற்றப்பட்டு புதிய கட்சி உருவெடுக்கும்’’ என்றன.

Related Stories: