சர்ச்சை பேச்சு எதிரொலி; பீகார் அமைச்சர் திடீர் ராஜினாமா

பாட்னா: நிதிஷ் குமார் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய பீகார் வேளாண் அமைச்சர் சுதாகர் சிங் நேற்று  தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகார், கைமூரில் நடந்த கூட்டத்தில் சமீபத்தில் பேசிய மாநில அமைச்சர்  சுதாகர் சிங், “எங்கள் துறையில் (வேளாண் துறை) திருட்டுச் செயல்களைச் செய்யாத ஒரு பிரிவுகூட இல்லை. மேலும், இந்தத் துறையின் பொறுப்பாளராக நானே இருப்பதால், அத்தகையவர்களுக்கு நானே தலைவராகவும் ஆகிவிட்டேன். அதோடு, விதைக் கழகம் வழங்கும் விதைகளை எந்த விவசாயியும் தன்னுடைய வயல்களில் பயன்படுத்துவதில்லை. தரமான நெல் சாகுபடி செய்ய வேண்டிய விவசாயிகள், பீகார் மாநில விதைக் கழகத்தின் நெல் விதைகளை எடுப்பதில்லை.

விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதற்குப் பதிலாக, விதை நிறுவனங்கள் ரூ.100 முதல் 150 கோடி திருடுகின்றன. தற்போது மாவட்டத்திலிருந்து இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். அதற்குப் பிறகும் நிலைமை மாறவில்லை என்றால், அமைச்சராகி என்ன பலன்? கைமூர் மாவட்டம் ஊழல் அதிகாரிகளால் நிறைந்துள்ளது” என்றார். அவர் தொடர்ந்து சர்ச்சையாக பேசி வந்த நிலையில் நேற்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்  தேஜஸ்வியாதவை சந்தித்து  தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதை  அவரது தந்தையும் மாநில ஆர்ஜேடி தலைவருமான ஜெகதானந்த் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories: