சிறுமியின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்ட ‘ஹேர்பின்’; எய்ம்ஸ் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்

போபால்: சிறுமியின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்ட 4 சென்டிமீட்டர் ஹேர்பின்னை போபால் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த சிறுமி ஒருவர் தற்செயலாக பெண்கள் பயன்படுத்தும் ஹேர்பின்னை விழுங்கி விட்டார். அந்த ஹேர்பின், சிறுமியின் சுவாசக் குழாயில் சிக்கிக் கொண்டது. ஆனால் ஹேர்பின் சிக்கிக் கொண்ட விசயத்தை தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவிக்கவில்லை. அதேநேரம் சிறுமிக்கு மூச்சுவிடுதலில் சிரமம் இருந்ததால், மூன்று நாட்களுக்கு பின் தனது பெற்றோரிடம் நடந்த விசயத்தை சிறுமி தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களது மகளை போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிக்கு, ரேடியோகிராபி மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன் ஆகியவற்றை மருத்துவர்கள் செய்தனர். அதில், சிறுமியின் சுவாசக் குழாயில் 4 சென்டிமீட்டர் நீளமுள்ள ஹேர்பின் சிக்கிக் கொண்டிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன்பின் டாக்டர் விகாஸ் குப்தா தலைமையிலான மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சிறுமியின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த ஹேர்பின்னை அகற்றினர். இதனால் சிறுமி மற்றும் அவரது பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: