கோபி அருகே காகித ஆலையை மூடக்கோரி கிராம மக்கள் தர்ணா

கோபி: கோபி அருகே கழிவுநீரால் மாசு ஏற்படுவதாகவும், காகித ஆலையை மூடக்கோரியும் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஆலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபி அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட தண்ணீர்பந்தல் புதூரில் தனியாருக்கு சொந்தமான காகித ஆலை உள்ளது. 20 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் ஆலை அருகிலேயே தேக்கி வைத்து, வாய்க்கால் தண்ணீரில் இரவு நேரங்களில் வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், ஆலை வளாகத்தில் 2 ஏக்கர் பரப்பில் பெரிய அளவில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காகிக ஆலையில் இருந்து வாய்க்காலில் வெளியேற்றப்படும் கழிவு நீரால் ஆலையை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை ஆய்வு செய்து, மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், மீண்டும் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.

இதனால், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காகித ஆலை முன்பு திரண்டு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோபி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.  இதையடுத்து போராட்டத்தினர் கூகலூர் மின்வாரிய அலுவலகத்தில் காகித ஆலைக்கு மின் இணைப்பு வழங்க ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: