காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருமுனை போட்டி சத்தியமூர்த்தி பவனில் அக்.17ம் தேதி வாக்குப்பதிவு

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருமுனை போட்டி நிலவி வருகிறது. இதில் யாரும் வாபஸ் பெறாவிட்டால் அக்டோபர் 17ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வாக்குபதிவு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை கட்சி தலைமை வெளியிட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24ம்தேதி தொடங்கி 30ம்தேதி உடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவராக்க சோனியாகாந்தி முயற்சி மேற்கொண்டார். இதனால் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.  

ஆனால் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சோனியா காந்தியின் அதிருப்திக்கு அசோக்  கெலாட் ஆளானார். இதனால் அவர் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து  விலகினார். இதனால் வேட்பு மனுத் தாக்கலின் கடைசி  நாளான நேற்று முன்தினம் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட்  மாநில காங்கிரஸ் தலைவர் கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.   இந்த மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டு  அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்  பட்டிருந்தது. அதன்படி வேட்புமனு பரீசலனை செய்யப்பட்டு தேர்வு செய்யபட்ட  வேட்புமனுக்களாக கார்கே மற்றும் சசிதரூர் மனுக்கள் மட்டும்  ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜார்கண்ட் மாநில காங்கிரஸ்  தலைவர் கேஎன் திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் குழு செயலாளர் மதுசூதன் மிஸ்திரி, தலைவர்  பதவிக்கான தேர்தலில் மொத்தம் 20 வேட்புமனு படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.  அதில், கையொப்ப பிரச்னை காரணமாக ஆய்வுக் குழு 4 படிவங்களை நிராகரித்தது.  திரும்பப் பெறுவதற்கு அக்டோபர் 8 வரை அவகாசம் உள்ளது, அதன் பிறகு தெளிவாகத்  தெரியும். யாரும் வாபஸ் பெறாவிட்டால் வாக்குப்பதிவு தொடங்கும்’ என்றார். இதனால் தற்பொழுது வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே - சசிதரூர் என இரு முனைப் போட்டியே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் யாரும் வாபஸ் பெறாதபட்சத்தில் அக்டோபர் 17ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலங்களில் வாக்குபதிவை நடத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக அன்றைய தினம் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆனாலும் இன்னும் மாநில தேர்தல் பார்வையாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், தமிழகத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 88 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். தேர்தல் நடைபெற்றால் அன்றைய தினம் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தங்கள் வாக்கை பதிவு செய்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள் டெல்லியில் இருந்தால் அங்கேயும் வாக்களிக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தது.

Related Stories: