மின் ஊழியர்கள் ஸ்டிரைக் தீவிரம் மின்தடையால் இருளில் மூழ்கியது புதுச்சேரி: பொதுமக்கள் கடும் அவதி சாலை மறியலால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார் மயத்தை கண்டித்து மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி முழுவதும் இருளில் மூழ்கியது. புதுச்சேரி அரசு மின்துறையை தனியார் மயமாக்க  நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனால் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள், தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழுவினர் கடந்த 28ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மின்துறை ஊழியர்களின் ஸ்டிரைக் தொடர்கிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், அந்தந்த பிராந்தியங்களில் உள்ள தலைமை அலுவலகங்களில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் நேற்று 4வது நாளாக வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளும் நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டன. மின் ஊழியர்களின் போராட்டத்தால் கடந்த 28ம் தேதி முதல் புதுச்சேரி கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகரப் பகுதிகளிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மின்வெட்டை சீரமைக்க ஊழியர்கள் இல்லாததால் பல மணி நேரம் மின்விநியோகம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள், அந்தந்த பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களின் ஸ்டிரைக்கால் தொழிற்சாலைகளும் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரிய தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர் வைத்து இயக்கப்படுகிறது. சிறிய தொழிற்சாலைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் மின்சாரம் இல்லாததால் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழுதுகளை சீரமைத்து மின்தடையை போக்கவும் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஒன்றிய பவர்கிரிட்டில் இருந்து 24 அதிகாரிகளை புதுச்சேரிக்கு அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்த உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் மின்ஊழியர்களை நியமிக்கவும், ஓய்வுபெற்ற மின்தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், மின்துறை ஊழியர்கள், அதிகாரிகள் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இது, பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. ஆகையால், மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் மின்தடையை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. இதனை அரசு வேடிக்கை பார்க்காது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்தடையை சீரமைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் பொதுமக்களும் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டும். டெண்டர் கோரப்பட்டு இருந்தாலும், ஒரே நாளில் மின்துறை தனியார்மயமாகி விடாது. எனவே, மின்துறை ஊழியர்கள் தங்களுடைய குறைகளை அரசிடம் வைக்கலாம்.

அவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்றார். அமைச்சரின் எச்சரிக்கை, மின்ஊழியர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று மாலை 5.15 மணியளவில் புதுச்சேரி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரம் மின்சாரம் வராததால் புதுவை முழுவதும் இருளில் மூழ்கியது. குடிநீர் சப்ளையும் முடங்கியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மின்தடையை கண்டித்து புதுச்சேரியில் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். திருவாண்டார்கோவிலில் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையிலும், சேதராப்பட்டு உள்ளிட்ட பல இடங்களிலும் சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டனர்.

Related Stories: