தமிழக மீனவர்கள் வழக்கு ஒன்றிய அரசுக்கு 14 நாட்கள் கெடு

புதுடெல்லி: ‘தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் அக்டோபர் 14க்குள் பதிலளிக்க வேண்டும்,’ என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை கடற்படையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஒன்றிய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என கோரியுள்ளார். இதை கடந்த மாதம் 2ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில், நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், ‘இந்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் வேண்டும்,’ என்றார். அதை ஏற்ற நீதிபதிகள், அக்டோபர் 14ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், வழக்கையும் ஒத்திவைத்தனர்.

Related Stories: