மயிலாடுதுறையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் பாரத நேருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு குற்ற புலனாய்வு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தார்ப்பாயால் மூடப்பட்ட லாரியை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை நடத்தினர். அந்த லாரியில் வெள்ளை சாக்குகளில் 245 மூட்டையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் கடலங்குடி பகுதியில் ரேஷன் அரிசி வாங்கி லாரி மூலமாக கேரளாவுக்கு கொண்டு சென்று கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து கேரளாவிற்கு கடத்தி செல்லப்பட்ட 11 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் கன்னியாகுமரி சேர்ந்த மணிகண்டன் (53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ரேஷன் அரிசி உரிமையாளர் தர்மராஜ், வாகன உரிமையாளர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.

Related Stories: