திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எதிர்ப்பு சக்தி ஊடுருவலா?: தேவஸ்தான அர்ச்சகர்கள் விளக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு. இவர் தேவஸ்தானம் குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்து வெளியிடுவார். இதேபோன்று அண்மையில் ரமண தீட்சிதலு ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதில், ‘ஏழுமலையான் கோயிலுக்குள் பிராமண எதிர்ப்பு சக்திகள் ஊடுருவியிருப்பதாகவும், கோயில் கொள்கைகளுடன் அர்ச்சகர் முறையையும் அவர்கள் அழிப்பதற்குள் முதல்வர் ஜெகன்மோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஏழுமலையான் கோயிலின் தற்போதைய தலைமை அர்ச்சகர்களான வேணுகோபால தீட்சிதர், கோவிந்தராஜு தீட்சிதர், கிருஷ்ண தீட்சிதர் மற்றும் மூத்த அர்ச்சகர் கிரண் தீட்சிதர் உள்ளிட்ட வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் ேநற்று கூட்டாக திருமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஏழுமலையான் கோயிலில் வைகானச ஆகம முறைப்படி நித்ய கைங்கர்யங்கள் நடந்து வருகிறது. ரமண தீட்சிதர் தனது தனிப்பட்ட கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதற்கும் வம்ச பரம்பரை அர்ச்சகர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தெரிவிப்பது போன்று எதிர்ப்பு சக்திகள் யாரும் இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அர்ச்சகர் பணியை செய்து வருகிறோம்.

தற்போது 4 குடும்பங்களை சேர்ந்த 53 வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் சுவாமிக்கு கைங்கர்யம் செய்கின்றனர். ஓய்வுபெற்ற பிறகும் அர்ச்சகர்கள் சுவாமியின் பாத சேவையில் பங்கேற்க தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கி உள்ளது. குற்றசாட்டு தெரிவிக்கும் ரமண தீட்சிதருக்கும், மாதத்திற்கு ஒருமுறை ஏழுமலையான் பாத சேவை செய்ய வாய்ப்பளித்து அதற்கான கவுரவ தொகையாக மாதம் ரூ.85 ஆயிரம் தரப்படுகிறது என தெரிவித்தனர்.

Related Stories: