இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்ததால் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம்: கலெக்டர் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: தென்காசி மாவட்டத்தில், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவரை இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டம், சிவகிரியை சேர்ந்த மதிவாணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த மார்ச் மாதம் தென்காசி மாவட்டம், ராயகிரி கிராமத்தில் நண்பரின் தந்தை இறந்த நிகழ்ச்சிக்கு எனது நண்பர்களுடன் சென்றேன். நான்  குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதால், அங்கிருந்த சிலர் என்னை நீ எப்படி இங்கு வரலாம் எனக்கூறி சாதியை  கூறி திட்டினர். மேலும் நான் அங்கு இருந்தால் இறந்தவரின் உடல் இறுதிச்சடங்கிற்கு யாரும் ஒத்துழைக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் நான் அங்கிருந்து  உடனடியாக வெளியேற்றப்பட்டேன். அங்கிருந்த நிர்வாகிகள் சோழராஜன், அம்மையப்பன், கார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் அவமரியாதையாக திட்டினர்.

மேலும் என்னை அழைத்துச்சென்ற நண்பர்களை மறுநாள் அழைத்து என்னை இறப்புக்கு அழைத்துச்சென்றதால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க  சொல்லியுள்ளனர். அவர்களை ஊரை விட்டும் ஒதுக்கி வைத்து விட்டனர். இதுகுறித்து  சிவகிரி காவல்நிலையத்தில் நான் புகார் அளித்தேன். புகாரின் அடிப்படையில் 9  பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. குற்றவாளிகளை கைது செய்யவும் இல்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி  உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சக்திகுமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து தென்காசி கலெக்டர், சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று  ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக். 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: