வாலாஜாபாத் அருகே உள்ள குடோனில் காஸ் சிலிண்டர் வெடித்து 12 பேர் படுகாயம்: அரசு பள்ளி மாணவர், குடோன் உரிமையாளரும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் காஸ் சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்தது. இதில் படுகாயமடைந்த 12க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில், தொழிற்சாலைகளில் உள்ள உணவகங்களுக்கு காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருபவர் ஜீவானந்தம். இந்நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று இரவு 7 மணிக்கு வழக்கம் போல் வாகனங்களில் இருந்து காஸ் சிலிண்டர்களை தொழிற்சாலைகளில் இறக்கிவிட்டு, ஊழியர்கள் மீண்டும் குடோனுக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள், விற்பனை செய்த காஸ் சிலிண்டர்கள் குறித்த கணக்குகளை நிர்வாகத்திடம் ஒப்படைத்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் 7 மணிக்கு மேல் திடீரென குடோனில் இருந்து புகை வந்துள்ளது. உடனே, குடோனில் இருந்த ஊழியர்கள், நிர்வாகிகள் வெளியேறுவதற்குள் புகையுடன் சேர்ந்து தீயும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. மேலும் அங்கிருந்த சிலிண்டர்கள் வெப்பம் காரணமாக அதிக சத்தத்துடன் வெடித்து சிதறத் தொடங்கியது.

இந்த காஸ் சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டதால், அருகில் வசித்த குடும்பத்தினர் அச்சத்தில் வீட்டில் இருந்து வெளியேறி உயிர் பயத்தில் ஓடத் தொடங்கினர். அதேநேரத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியபடியே இருந்தது. பின்னர், இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டு கோட்டை, உத்திரமேரூர், மறைமலைநகர் போன்ற பகுதிகளில் இருந்து 5 நவீன தீயணைப்பு கருவிகளுடன் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ காயங்களுடன் இருந்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூஜா (19) மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர் கிஷோர் (13), அதே பகுதியை சேர்ந்த பட்டதாரியான கோகுல் (22), சந்தியா (21), நிவேதா (21), குடோன் உரிமையாளர் ஜீவனாந்தம், சண்முக பிரியன், ஆமோத்குமார், தமிழரசன் (10) மற்றும் கும்பகோணம், குடவாசல் பகுதியை சேர்ந்த அருண் (22), குடவாசல் பகுதியை சேர்ந்த குணால் (22) உட்பட 12க்கும் மேற்ப்பட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நடந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சுதாகர், செங்ைக எஸ்பி சுகுணா சிங் மற்றும் உயர்அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மருத்துவமனைக்கு விரைந்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: