அனைத்து மொபைல் போன்களின் IMEI எண்களையும் ICDR போர்ட்டலில் பதிவு செய்ய ஒன்றிய அரசு புதிய உத்தரவு

டெல்லி: அனைத்து மொபைல் போன்களின் IMEI எண்களையும் ICDR போர்ட்டலில் பதிவு செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஜன.1-ம் தேதி முதல், அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களும் பதிவு செய்ய ஒன்றிய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.   

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் திருட்டுகளையும் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்கும்பொருட்டு ஒன்றிய அரசு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வைக்கப்படுவதற்கு முன்பு அதன் IMEI என்ற தனித்துவமான எண்ணை பதிவு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

ஒன்றிய அரசின் இந்திய போலி சாதனக் கட்டுப்பாட்டு அமைப்பின்(ICDR) அதிகாரபூர்வ இணையதளமான https://icdr.ceir.gov.in-ல் மொபைல் உற்பத்தியாளர்கள் தாங்கள் தயாரிக்கும் மற்றும் இறக்குமதி செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் IMEI எண்ணை பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. வரும் 2023, ஜனவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வர உள்ளது.

இதன்மூலமாக டிஜிட்டல் மூலமாக ஸ்மார்ட்போன்களின் IMEI எண்ணை நிர்வகிக்க முடியும் என்றும் போலி ஸ்மார்ட்போன்கள் விற்பனையையும் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்கவும் அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும் என்று ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை கூறியுள்ளது.

மேலும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம் எனவும் இதற்கென எந்த முகவரையும் நீங்கள் அணுகத் தேவையில்லை எனவும் அவ்வாறு பதிவு செய்யாத ஸ்மார்ட்போன்கள் சந்தையில் விற்பனை செய்யபட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.

Related Stories: