ஆணையருக்கு அடி உதை ஜெய்ப்பூரில் பாஜ மேயர் பதவி பறிப்பு

ஜெய்ப்பூர்: முன்னாள் ஆணையர் யாக்யா மித்ரா சிங்கை தாக்கியது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜெய்ப்பூர் மாநகராட்சியின் பாஜ மேயர் சவுமியா குர்ஜாரின் பதவியை ராஜஸ்தான் அரசு பறித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்  தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆனால், ஜெய்ப்பூர் மாநகராட்சியின் மேயராக பாஜ.வை சேர்ந்த சவுமியா குர்ஜார் இருந்தார். இந்த அலுவலகத்தில் கடந்தாண்டு ஜூன் 4ம் தேதி மேயர் சவுமியா குர்ஜாருக்கும் அப்போதைய மாநகராட்சி ஆணையர் யாக்யா மித்ரா சிங் தியோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ஆணையர் மித்ராவை சவுமியாவும், மேலும் சில பாஜ கவுன்சிலர்களும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, மேயர் சவுமியாவையும், கவுன்சிலர்களையும் ராஜஸ்தான் அரசு சஸ்பெண்ட் செய்தது. ஜூன் 7ம் தேதி முதல் மேயர் பொறுப்பை ஷீல் தபாய் கவனித்து வந்தார்.  ராஜஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றதால், சவுமியா மீண்டும் மேயரானார். இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட நீதி விசாரணையில், முன்னாள் ஆணையர் யாக்யா மித்ரா சிங்கை மேயர் சவுமியா தாக்கியது நிரூபிக்கப்பட்டது. இதனால், மேயர் பதவியில் இருந்து நேற்று அவரை நீக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்துள்ளது.

Related Stories: