புதுவையில் இந்து முன்னணி பந்த் கல்வீச்சில் 4 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதி

புதுச்சேரி: திமுக எம்பி ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி  புதுச்சேரியில் இன்று (27ம்தேதி) முழு அடைப்பு  நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்தது.  இதற்கு 20க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. ஒருவார விடுமுறை முடிந்து பள்ளிகளில் காலாண்டு தேர்வு தொடங்கியுள்ள நிலையிலும், விழாக்காலம் என்பதாலும் முழு அடைப்பு நடத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வாபஸ் பெற வலியுறத்தினர். ஆனால் திட்டமிட்டபடி முழு அடைப்பு நடைபெறும் என இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் நேற்று உறுதிப்படுத்தின. மேலும் அதன் நிர்வாகிகள் நேற்று புதுச்சேரி முழுவதும் வீதி வீதியாக சென்று வியாபாரிகள், வணிக நிறுவனங்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் கல்வியாளர்கள், ஆட்டோ, டெம்போ, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினரை சந்தித்து ஆதரவு கேட்டனர்.

 இந்த நிலையில் இந்து முன்னணி அறிவித்த பந்த் (முழு அடைப்பு) காலை 5 மணிக்கு தொடங்கியது.

இதன் காரணமாக புதுச்சேரியில் தனியார் பஸ்கள் முற்றிலும் ஓடவில்லை. மேலும் பிஆர்டிசி அரசு பஸ்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு செல்லும் பயணிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். கோரிமேடு, கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு எல்லைவரை சென்று அவர்கள் பயணிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. சென்னை மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளுக்காக புதுவை பஸ் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய  போலீசார் பாதுகாப்புடன் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் பாஜக தொழிற்சங்கம் ஆதரவு காரணமாக டெம்போ, ஆட்டோக்கள் ஓடவில்லை.  பிரதான சாலைகளான மறைமலையடிகள் சாலை, விழுப்புரம், கடலூர் சாலையில் போக்குவரத்து குறைவாகவே இருந்தன. மேலும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. தேனீர் கடைகள், மருந்தகங்கள் திறந்திருந்த நிலையில் அவற்றையும் சிலர் பைக்குகளில் கும்பலாக வந்து அடைக்குமாறு வற்புறுத்தினர்.

இதனால் போலீசாரும் ஆங்காங்கே கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். இருப்பினும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள், அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. அவற்றின் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆனால் பஸ்கள் ஓடாததால் மாணவர்கள் பள்ளி செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.  பஸ்களை இயக்கும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. அங்கு நடைபெற இருந்த காலாண்டு தேர்வுகள் வேறொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டன. இதனிடையே சீனியர் எஸ்பி தீபிகா உத்தரவின்பேரில் நகரம், கிராமங்களில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அசம்பாவிதம் தவிர்க்க ஆங்காங்கே எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் ரோந்துப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் அதையும் மீறி சில இடங்களில் பஸ்கள் உடைப்பு, வியாபாரிகளுக்கு, ஆட்டோ டிரைவர்களுக்கு மிரட்டல், பொதுமக்களுடன் வாக்குவாதம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்தது. மேலும் புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிகாலையில் சென்ற தமிழக அரசு பஸ்களின் மீது வில்லியனூர் பைபாஸ் சாலையில்  (எம்ஜிஆர் சிலை அருகே) மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர்.

மேலும் அரும்பார்த்தபுரம் பாலம் இறக்கத்திலும் தமிழக அரசு பஸ் மீது கல்வீ தாக்கப்பட்டது. இதில் 4 பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் டிரைவர்கள், சில பயணிகள் காயத்துடன் உயிர்தப்பினர். இதையடுத்து அந்த பஸ்கள் வில்லியனூர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் ேவறு சில இடங்களிலும் வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்த இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், பாஜகவினர் புதிய பஸ் நிலையம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திமுகவுக்கு எதிராக முழக்கமிட்டு அரசு பஸ்களை வழிமறித்தனர். அவர்களை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனிடையே முழு அடைப்பின்போது புதுச்சேரி காவல்துறை பெயரளவில்தான் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதாக பொதுமக்களிடம்  கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Related Stories: