அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம்: இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை இடைக்கால பொதுச்செயலாளர் பழனிச்சாமி நீக்கியுள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரனை ஆலோசகராக ஓ.பன்னீர்செல்வம் நியமித்து சில மணி நேரத்தில் இபிஎஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள பண்ருட்டி ராமசந்திரனை அரசியல் ஆலோசகராக நியமனம் செய்வதாக ஓபிஎஸ் சற்று நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக பண்ருட்டி ராமசந்திரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து, அனைத்தும் நீக்கி வைக்கப்படுவதாக ஈபிஎஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குழையும் வகையில் நடந்தாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழக- கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமசந்திரன் இன்று முதல் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஓபிஎஸ்- சசிகலா ஆகியோர் சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை அவருடைய இல்லத்திற்கே சென்று சந்திப்பு நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமசந்திரன், அதிமுக மற்றும் ஈபிஎஸ் தலைமை குறித்து சில கருத்துகளை வெளிப்படையாக கூறினார். மேலும், ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே உள்ள அதிகாரபோட்டி தொடர்பாக வெளிப்படையான கருத்தினையும் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில், இன்றைய தினம் பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: