நாங்குநேரி-வள்ளியூர் இடையே இரட்டை ரயில் பாதையில் கோட்ட மேலாளர் ஆய்வு

நாங்குநேரி : நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் இடையே 10 கிமீ தூரத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ள நிலையில் ரயில்வே கோட்ட மேலாளர் தலைமையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.ெசன்னையில் இருந்து கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாதை தமிழகத்தின் முக்கிய வழித்தடம் ஆகும். இந்த வழித்தடத்தின் மூலம் சென்னையில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, கோவில்பட்டி, நெல்லை, கன்னியாகுமரி வரை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 28 விரைவு ரயில்கள், பிற மாநிலங்களில் இருந்து 10 ரயில்கள் இயக்கப்படுகிறது.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழித்தடத்தில் பயணிகளின் தேவை அதிகரித்ததால் அதிகமான ரயில்கள் இயக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கேற்ப போதிய ரயில் பாதைகள் இல்லாததால் கூடுதல் ரயில் இயக்க முடியாத சூழல் உள்ளது. இதை தொடர்ந்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 739 கி.மீ தூரம் இரட்டை ரயில் ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது சென்னையில் இருந்து மதுரை வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இப்பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாங்குநேரி-வள்ளியூருக்கு இடையிலான 10 கிலோமீட்டர் நீள இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியை திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் முகுந்த், ரயில்வே இயக்க பாதுகாப்பு பிரிவு கமிஷனர் அபய்குமார் ராய் ஆகியோர் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக நாங்குநேரி ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் அதிகாரிகள் குழுவினர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து நாங்குநேரி, வள்ளியூர் நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்ட சிக்னல் ரேடார்கள் செயல்பாடுகள் குறித்தும், நடைமேடைகள் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து டிராலியில் சென்று தண்டவாளம் அமைக்கும் பணிகளை நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தனர்.  இதை தொடர்ந்து மாலையில் அதிவேக ரயில் இயக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. தற்போது ஆய்வுகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் இரட்டை ரயில் பாதை பயன்பாட்டிற்கு வரும் என்று ரயில் பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனிடையே நேற்று மாலை 3 மணியளவில் வள்ளியூரில் இருந்து நாங்குநேரி வரை மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Related Stories: