ஓடும் பேருந்தில் தொங்கியபடி சாகச பயணம் செய்த பள்ளி மாணவன் கைது: சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் போலீஸ் நடவடிக்கை

சென்னை: தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடந்த மாதம் பள்ளி சிறுவன் ஒருவன் பேருந்தில் தொங்கிக்கொண்டு சாலையில் காலை தேய்த்துக்கொண்டு செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், சமூக ஆர்வலர் ஒருவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் அந்த வீடியோவை வைத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் பிராட்வேயில் இருந்து மணலியை நோக்கி செல்லும் மாநகர பேருந்தில் (தடம் எண் 44) தொங்கியபடி, சாலையில் காலை தேய்த்து தொங்கிக்கொண்டு சென்றது திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்த 17 சிறுவன் என்பதும், கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த சிறுவனை பிடித்து தண்டையார்பேட்டை போலீசார் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது தான் செய்த தவறை அந்த சிறுவன் நீதிபதி முன் ஒப்புக்கொண்டு இனி இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன் என்று கூறினான். மேலும் நீதிபதி மீண்டும் சிறுவன் வரும் 10ம்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார். மேலும், ரயில் மற்றும் பேருந்துகளில் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் தொங்கிக்கொண்டும், கத்தியை வைத்து தேய்த்துக்கொண்டும் பயணிகளை மிரட்டி செல்வது சமீப காலமாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவி வருகிறது. இச்சம்பவத்தால் பயணிகள் பயப்படவும் செய்கிறார்கள். எனவே காவல்துறையினர் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: