கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழக பகுதிகளின்மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 23 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 14 மாவட்டங்களில் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னை நகரில் மந்தைவெளி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, நங்கநல்லூர், வட சென்னையில் சில இடங்கள் என மழை பெய்தது. நேற்றைய மழையில் அதிகபட்சமாக திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் 170 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக மன்னார்  வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கைக்கு தெற்கே உள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் இன்று வீசும். இதே நிலை 29ம் தேதி வரை நீடிக்கும் என்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: