தஞ்சையில் கொட்டித்தீர்த்த கனமழை: அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதம்

தஞ்சாவூர் : மேற்கு திசை காற்று வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் எறையூர், அகரம் சீகூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த முறை பெய்த மழையின் போது விதைப்பு செய்து தற்போது வளர்ச்சி பருவத்தில் உள்ள மக்காச்சோளம் மற்றும் பருத்தி உள்ளிட்ட மானவாரி பயிர்களுக்கு ஏற்ற மழை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக சுமார் 24 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சந்தைப்பேட்டை, ஆவியூர், குன்னத்தூர், அரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மனப்பூண்டி, தேவனூர், அரக்கண்டநல்லூர், வடக்கலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெற்கதிர்கள் நீரில் மூழ்கின. நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையால் காகிதமில்லத்நகர், வல்லம் பெரியார்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் புகுந்தது. சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் 2 குடிசை வீடுகள் இடிந்தன. 50-க்கு மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததுடன் கால்நடைகளும் உயிரிழந்தன. கல்விராயன் பேட்டை, புதுகல்விராயன் பேட்டை உள்ளிட்ட 10 கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்கதிர்கள் மூழ்கின. மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.    

இதேபோல், திருச்சியில் பெய்த கனமழையால் உறையூர் சாலையில் பாதாள பணிக்காக தோண்டி மூடப்பட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டது. அதில் அந்த வழியே சென்ற லாரி சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மாநகராட்சி ஊழியர்கள் பொக்லின் இயந்திரம் மூலம் பள்ளத்தை மூடும் பணியில் ஈடுப்பட்டனர். அதேபோல், சாலைகளில் அங்கங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் அவற்றை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories: