பேக்கரியில் பிரெட் சாப்பிட்ட 3 சகோதரர்கள் மயக்கம்: ராணிப்பேட்டையில் பரபரப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் சாலமன். இவரது மனைவி ரூபி. மகன்கள் சைமன்(10), ஜான்சன்(9), ரூபன்(7). சாலமன் நேற்று தனது மனைவி, மகன்களுடன் ராணிப்பேட்டைக்கு வந்தார். பின்னர் அனைவரும் ராணிப்பேட்டை பாலாற்றங்கரையோரம் உள்ள ஒரு பேக்கரிக்கு சென்றனர். அங்கு சிறுவர்கள் 3பேரும் பிரெட் மற்றும் ஜாம்பன் சாப்பிட்டுள்ளனர். அதன்பிறகு அனைவரும் வீடு திரும்பினர்.  வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் சிறுவர்கள் சைமன், ஜான்சன், ரூபன் ஆகியோர் திடீரென வாந்தி எடுத்தனர். அடுத்தடுத்து அவர்கள் 3 பேரும் மயங்கி விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகன்கள் 3 பேரையும் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.  பின்னர் 3 பேரும் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி அதிகாரிகள், போலீசார் இன்றுகாலை பேக்கரிக்கு வந்தனர். அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பிரெட், ரொட்டி,பன் மற்றும் இவற்றை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும், பேக்கரி உரிமையாளரிடமும் விசாரணை நடத்தினர்.

Related Stories: