மாநிலம் முழுவதும் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு பயிற்சி வழங்க வேண்டும்-சித்தூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

சித்தூர் :  மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு  சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு பயிற்சி வழங்க வேண்டும் என சித்தூரில் நடந்த சங்க ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினர். சித்தூர் அரசு பிசிஆர் உயர்நிலைப் பள்ளியில் பிஆர்டியு ஏபி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்  அரசு ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் கிரி பிரசாத் பேசியதாவது:

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் முதலமைச்சராக பதவியேற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அவர் தேர்தலின் போது மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார். இதனால் அரசு பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவினர்களும் ஜெகன்மோகன் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள். ஆனால் மூன்று வருடங்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் இதுவரை கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வில்லை.

எனவே மாநில அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அதேபோல் மாதந்தோறும் பிஎப் நிதியை மாநில அரசு உடனடியாக பிஎப் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். அதேபோல் ஏபிஜிஎல்ஐ மூலம் அரசு ஆசிரியர் ஊழியர்களுக்கு கடன் உதவி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள டிஏ பில் உடனடியாக வழங்க வேண்டும். ஏராளமான ஆசிரியர்களுக்கு பிஆர் சி நிலுவையில் உள்ளது.

அதனை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.  அதேபோல் மாநிலம் முழுவதும் டிஒய்இஓ மற்றும் எம்இஓ ஆசிரியர்கள் பணியிடம் உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். அதேபோல் ஆசிரியர்களின் தகுதிக்கு ஏற்ப பணி உயர்வு வழங்க வேண்டும். மாநில முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனை உடனடியாக மாநில அரசு பூர்த்தி செய்ய வேண்டும். மாநில அரசு தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

இதனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உடனடியாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு பயிற்சி வழங்க வேண்டும். அதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள கேஜிபிவி அரசு பள்ளிகளை சீரமைக்க வேண்டும். அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் ஆந்திர மாநில பி ஆர் டி யு ஏ பி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் ரெட்டி, பொதுச் செயலாளர் கே.எஸ். கண்ணன், துணைத் தலைவர் விஜய் பாஸ்கர், மாநில செயலாளர் பரந்தாமன், பொருளாளர் கனக ஆச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: