இதுவரை இல்லாத அளவில் வீழ்ச்சியடைந்தது இந்திய ரூபாய்... டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசுகள் குறைந்து 81.50 ஆக சரிவு..!!

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 41 காசுகள் குறைந்து இதுவரை இல்லாத அளவாக 81.50 காசுகளாக சரிவை கண்டுள்ளது. மேலும் இந்திய பங்குசந்தையும் கடும் சரிவை சந்தித்திருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதத்தை கடந்த 21 அன்று உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான பண மதிப்பு பல்வேறு நாடுகளில் சரிவை கண்டது. கடந்த புதனன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் குறைந்து 79.96 காசுகளாக சரிந்தது. இதேபோல் மறுநாளும், அதற்கு அடுத்த நாளும்  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 காசுகள் குறைந்து 80.67 காசுகளாகவும், 39 காசுகள் குறைந்து 81.18 ஆகவும் சரிந்து வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

அதாவது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசுகளாக குறைந்து 81.50 ஆக வீழ்ச்சியடைந்தது. கடந்த வெள்ளியன்று அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வால் 3-வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை கண்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவாகும். இதனிடையே பங்குசந்தையான சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் தலா 2% சரிவினைக் கண்டிருந்த நிலையில் இன்றும் கடும் சரிவில் காணப்பட்டுள்ளது. அதாவது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 725  புள்ளிகள் சரிந்து 57,372 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து 17,083 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. மேலும் இந்த சரிவானது மேலும் தொடரலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.

Related Stories: