நிதி வசூல் குற்றச்சாட்டில் வாரணாசியில் 2 பேர் கைது: தீவிரவாத தடுப்பு பிரிவு நடவடிக்கை

வாரணாசி: தீவிரவாத நடவடிக்கைக்காக நிதி வசூலில் ஈடுபட்ட இருவரை வாரணாசியில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்களின் வீடுகளில் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். குறிப்பிட்ட சமூகத்தினரின் மத உணர்வுகளைத் தூண்டிவிடும் கையில் நிதி வசூல் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜெய்த்புராவைச் சேர்ந்த ரிஸ்வான் அகமது மற்றும் ஆலம்பூரை சேர்ந்த முகமது ஷாஹித் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் பல ஆண்டுகளாக தொழில் செய்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், மொபைல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இருவர் மீதும் ஐபிசியின் 121ஏ, 153ஏ, 295ஏ, 109, 120பி மற்றும் 13(1)ஏ, பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற அனுமதியின் பேரில் அவர்களை 7 நாட்கள் தங்களது காவலில் வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: