சிறப்பு பேரவை கூட்டம் நடத்த அனுமதி: ஆம்ஆத்மி அரசுக்கு பணிந்தார் ஆளுநர்

சண்டிகர்: பஞ்சாப் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான சிறப்பு சட்டப் பேரவை கூட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி அளித்துள்ளார். பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி  நடைபெற்று வருகிறது. ஆனால், ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் ஆம்ஆத்மி  எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால்  சட்டப் பேரவையில் தங்களது அரசின் பலத்தை நிரூபிக்க வரும் 27ம் தேதி  சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் அறிவித்தார்.  ஆனால் சட்டசபை கூட்டத்தை திடீரென நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்தார்.

ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு ஆம்  ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த்  கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏவும், சட்டமன்ற சபாநாயகருமான குல்தார் சிங் சந்த்வான் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சட்டப் பேரவை சிறப்பு கூட்டத்தை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி அளித்துள்ளார். சட்டசபையின் மூன்றாவது கூட்டத்தொடரை இம்மாதம் 27ம் தேதி (செவ்வாய்கிழமை) நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார். அதனால் வரும் 27ம் தேதி தொடங்கும் சிறப்புக் கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத் தொடரில் பயிர் கழிவுகள் எரிப்பு மற்றும் மின்சாரத் துறை பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக ஆம் ஆத்மி அரசு வட்டாரங்கள் கூறின.

Related Stories: