அம்பத்தூரில் பரபரப்பு காதலன் வீட்டில் நள்ளிரவு காதலி தர்ணா போராட்டம்: போலீசார் சமரசம்

அம்பத்தூர்:  வளசரவாக்கத்தை சேர்ந்தவர் வினோதினி (19), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர், டிரக்கிங் எனப்படும் மலையேறும் நிகழ்வுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது அம்பத்தூர் அடுத்த ஐசிஎப் காலனியை சேர்ந்த ஸ்ரீதர் (22) என்பவர் அறிமுகமானார். இவர், தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நாகப்பட்டினம் சென்று வந்துள்ளனர். இதை தொடர்ந்து காதலன் ஸ்ரீதர், வினோதினியிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த வினோதினி கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் போலீசார் குடும்பத்தினரிடம் பேசி, உன்னை இன்னும் சில நாட்களில் ஸ்ரீதர், திருமணம் செய்து கொள்வார் என்று உறுதியளித்தனர். அதற்கு பின்பும் ஸ்ரீதர், வினோதினியிடம் பேசவில்லை. வினோதினி, போன் செய்தாலும் எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி நேற்று முன்தினம் நள்ளிரவு அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியில் உள்ள காதலனின் வீட்டில் வினோதினி தர்ணாவில் ஈடுபட்டார். பிறகு கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமணி, வினோதினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்ததால் வினோதினி தர்ணா போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றார்.

Related Stories: