காரைக்குடியில் ஜே.பி.நட்டாவுடன் ரகசிய சந்திப்பு மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பாஜகவில் இணைய திட்டமா?

திருச்சி: காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நடந்த ரகசிய சந்திப்பால் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பாஜகவில் இணைய திட்டமா? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது. பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 22ம் தேதி மதியம் அதிமுகவில் இருந்த விலகி தற்போது பாஜவில் சேர்ந்துள்ள முன்னாள் காரைக்குடி எம்எல்ஏ சோழன் சித.பழனிச்சாமி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மற்றும் வேறு யாருக்கும் தெரியாமல் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து  தெரிவித்தார்.

அவருடன் புதுக்கோட்டை அதிமுக நகர செயலாளர் பாஸ்கரும் சென்றிருந்தார். இந்த சந்திப்பின்போது, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்சியின் இன்றைய நிலை குறித்தும், தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும் பாacஜ தேசிய தலைவர் நட்டாவிடம் விவாதித்ததாக கூறப்படுகிறது. தவிர பாஜவிற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாவ உள்ளதாகவும் பாஜ நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். பாஜ தேசிய தலைவர் நட்டாவை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்த படம் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றார். ஆனால் அங்கு பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அமித்ஷாவை மட்டும் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விரக்தியுடன் சென்னை திரும்பினார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கரிடம் ரகசிய தூதுவிட்டு பேசி ஜே.பி. நட்டாவை சந்தித்து சமரசம் பேசினாரா? என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. சி.விஜயபாஸ்கர், ஜே.பி.நட்டாவை ரகசியமாக சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: