துலீப் கோப்பை பைனல்; மேற்கு மண்டலம் வலுவான முன்னிலை: ஜெய்ஸ்வால் 209*

கோவை: தென் மண்டல அணியுடனான துலீப் கோப்பை பைனலில், தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக  இரட்டைச் சதம் விளாசியதால் மேற்கு மண்டலம் வலுவான முன்னிலை பெற்றுள்ளது. கோவையில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த மேற்கு  மண்டலம்  முதல் இன்னிங்சில்  270 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஹெட் படேல் 98, உனத்கட் 47, ஷ்ரேயாஸ் 37, சர்பராஸ் 34, அதித் சேத் 25 ரன் எடுத்தனர். தென் மண்டல பந்துவீச்சில் சாய் கிஷோர் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டலம் 2ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் 118, மண்சிஷ் பாண்டே 48, கவுதம் 43 ரன் விளாசினர். ரவி தேஜா 26, சாய் கிஷோர் 6 ரன்னுடன் நேற்று  3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். தேஜா 34, கிஷோர் 6, பசில் தம்பி 1 ரன்னில் வெளியேற, தெற்கு மண்டலம் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மேற்கு மண்டலத்தின் உனத்கட் 4, அதித் ஷேத் 3 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 57 ரன் பின்தங்கிய நிலையில் மேற்கு மண்டலம் 2வது இன்னிங்சை தொடங்கியது.

பிரியங்க் பாஞ்சால் 40, கேப்டன் ரகானே 15 ரன், ஷ்ரேயாஸ் 71 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஜெய்ஸ்வால் - ஷ்ரேயாஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்தது. அடுத்து வந்த சர்பராஸ் கான் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் விளாசி அசத்தினார். 3ம் நாள் ஆட்ட முடிவில் மேற்கு மண்டலம் 3 விக்கெட் இழப்புக்கு 376 ரன் குவித்துள்ளது.  ஜெய்ஸ்வால் 209 ரன் (244 பந்து, 23 பவுண்டரி, 3 சிக்சர்), சர்பராஸ்கான்  30 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.தெற்கு மண்டல பந்துவீச்சில் சாய் கிஷோர் 2, கிருஷ்ணப்பா கவுதம் 1 விக்கெட் வீழ்த்தினர்.

319 ரன் வலுவான முன்னிலையுடன் இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கும் மேற்கு மண்டலம், இமாலய இலக்கை நிர்ணயித்து தெற்கு மண்டல அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சி செய்யும்.

Related Stories: