செல்போன் கடை ஊழியர்களை கடத்தி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 பேர் கைது: ஒருவருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள செல்போன் கடை நடத்தி வருபவர் டில்லி கணேஷ் (25). இவரது கடையில் வேலை பார்த்து வந்த முகம்மது  சாந்தகுமார் மற்றும் அவனது நண்பன் இப்ராஹிம்  ஆகிய 2 பேரும் கடந்த 21ம் தேதி   இரவு கடையை மூடிவிட்டு சாவியை முதலாளியிடம் கொடுப்பதற்காக நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் இவர்கள் சாந்தகுமார் மற்றும் முகம்மது இப்ராஹிம் ஆகிய இருவரையும் வலுக்கட்டாயமாக இரு சக்கர வாகனத்தில் ஏற்றி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட என்ஜிஜிஓ காலனியில் உள்ள பார்க்கில் உட்கார வைத்து செல்போன் கடை உரிமையாளரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டுவரச் சொல்லி மிரட்டியுள்ளனர்.  

இதனையடுத்து கடை உரிமைாயளர் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டருக்கு கொடுத்த  ரகசிய தகவலின் பேரில்  டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி, சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், காவலர்கள் சிலம்பரசன், இளையவேல், மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, கடை ஊழியர்களை கடத்தி வைத்திருந்த 5 பேரை மடக்கி கைது செய்தனர். ஒருவர் தப்பியோடினார். விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது பெரியகுப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ்(23), இஸ்மாயில் மகன் அன்சார் ஷெரிப் (23), கணேசன் மகன் உதயா(22), பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் பிராங்க்ளின் (19), பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ்பாபு மகன் ஆகாஷ் (19), என்பது தெரியவந்தது.  

மேலும்  கணேஷ் மகன் மோகன் (26) தப்பி ஓடியதாக காவல் துறை சார்பில் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் ஆகாஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: