மேல்நல்லாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் விழிப்புணர்வு நிகழ்ச்சி: சுகாதார துறை துணை இயக்குனர் பங்கேற்பு, 398 மாணவ, மாணவிகளுக்கு உடல் பரிசோதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால், சுகாதார துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. தற்போது மழை காலம் தொடங்க இருப்பதால் டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நல்லாத்தூரில் உள்ள அரசினர் உயர் நிலைப் பள்ளியில் மருத்துவமுகாம் நடைபெற்றது. தற்போது டெங்கு போன்ற காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் அதனை தடுக்கும் விதமாக மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், காய்ச்சல் இருந்தால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார துறை சார்பில் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கே.பாபு வரவேற்றார். சுகாதாரதுறை துணை இயக்குனர் கே.ஆர்.ஜவஹர்லால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக பள்ளியில் பயிலும் 398 மாணவ, மாணவிகளுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் காந்திமதி, சுகாதார ஆய்வாளர் சங்கர் மாணவ, மாணவிகளுக்கு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் காய்ச்சல் இருப்பவர்களுக்கு மருந்து மாத்திரை வழங்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார துறை துணை இயக்குனர் கே.ஆர்.ஜவஹர்லால் பேசும்போது, டெங்கு காய்ச்சல் கழிவு நீரால் ஏற்படுவதில்லை என்றும், நல்ல தண்ணீர் மூலம் தான் டெங்கு காய்ச்சல் பரவுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், வீட்டின் பின்புறம் வீணான பொருளாக வைத்துள்ள டயர், தேங்காய் மட்டை போன்றவற்றில் தேங்கும் நல்ல நீரின் மூலம் தான் இந்த டெங்கு காய்ச்சல் பரவுவதாகவும், அவ்வாறு தேங்கும் நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். இதில் ஒன்றிய திமுக செயலாளர் கே.அரிகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் குகானந்தம், துணைத் தலைவர் எம்.கே.மணவாளன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பாஞ்சாலி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சதீஷ்குமார், நோடல் அதிகாரி ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: